திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் செல்லுமா?: பல்கலைக்கழகம் விளக்கம்
திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டம் செல்லுமா என்ற சந்தேகங்களுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பெறப்படும் பட்டங்கள் செல்லாது என்ற தவறான தகவல்கள் பரவி வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு (10+2+3) என்ற அடிப்படையில் திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களின் பட்டங்கள், அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு செல்லத்தக்கவை என்று அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. முறையான அடிப்படைக் கல்வித் தகுதி இன்றி, நேரடியாக முதுநிலைப் படிப்பை முடித்தவர்களின் கல்வித் தகுதி குறித்தே, இப்போது சில வழக்குகளில் விவாதங்கள் எழுந்துள்ளன. அதற்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் படிப்புகளுக்கும் தொடர்பு இல்லை.