வடகிழக்கு பருவ மழை எப்படி இருக்கும்? : வானிலை மையத்திற்கு வாரியம் கடிதம்
வட கிழக்கு பருவ மழை, சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், வானிலை ஆய்வு மையத்திடம் விபரங்கள் பெற, மின் வாரியம், விரைவில் கடிதம் எழுத உள்ளது.
தமிழகத்தில், 2015ல், வடகிழக்கு பருவ மழையின் போது, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில், கனமழை பெய்தது.
இதனால், அந்த ஆண்டின், டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்ததுடன், மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன.
இதே போல, 2016 டிச., 12ல் வீசிய, 'வர்தா' புயலின் போது, சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் இருந்த, 1,093 கோடி ரூபாய் மதிப்பிலான, மின் சாதனங்கள் சேதமடைந்தன. இந்நிலையில், சில தினங்களில், வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெருவெள்ளம், வர்தா புயலின் போது, பிரச்னைக்குரிய இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின் சப்ளை நிறுத்தப்பட்டது. இதனால், மின் தடை, பொருள் சேதம் ஏற்பட்டதே தவிர, உயிரிழப்பு ஏற்படவில்லை. அப்போது, மேற்கொள்ளப்பட்டது போன்ற பணி, தற்போதும் பின்பற்றப்பட உள்ளது.
இந்த முறை, கூடுதல் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்படும். இதற்காக, வடகிழக்கு பருவ மழையின் போது, மின் விபத்து ஏற்படாமல் இருக்க, செய்யப்பட்டு வரும் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன.
இருப்பினும், எந்த பகுதியில் அதிக மழை இருக்கும்; எந்த சமயம் மழை இருக்கும்; காற்று பலமாக வீசும் பகுதி உள்ளிட்ட விபரங்கள், சென்னை, வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து, முன்கூட்டியே வாங்கப்படும். அதற்கேற்ப, மின் உற்பத்தி, மின் தேவை மேலாண்மை செய்யப்படும். இதற்காக, ஆய்வு மையத்திடம் விபரம் வாங்க, முறைப்படி, விரைவில் கடிதம் எழுதப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மணல் மூட்டைகள் தயாரிப்பில் சிக்கல் : மழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு, மணல் மூட்டைகள் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள, அரசு உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து, நீர்வளத் துறையின் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மண்டல தலைமை பொறியாளர் அலுவலகங்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. அணை, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில், உடைப்பு ஏற்பட்டால், அதை சமாளிப்பதற்காக, மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், நீர்வளத் துறையால் இயக்கப்பட்ட, 40க்கும் மேற்பட்ட குவாரிகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது, ஒன்பது குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன. இதன் காரணமாக, மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு, தேவையான மணல் மூட்டைகள் தயாரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.