அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஆலோசனை வழங்கும் ஜஸ்ட் மேட்
அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி அதன் மூலம் சமூக மாற்றத்துக்கான செயல்திட்டங்களை அரசாணையில் இடம்பெறச் செய்ய 'ஜஸ்ட் மேட்' என்ற தன்னார்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி என்பது, அரசின் பொதுச் செயல்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவர முயல்வது ஆகும். பல அமைப்புகள் பல ஆண்டுகளாகச் செய்ய முயல்வதை ஓர் அரசாணையின் மூலம் எளிதில் சாத்தியப்படுத்திவிடலாம். இலவச கல்வி, மருத்துவம், மதிய உணவுத் திட்டம் போன்ற பல செயல்கள் அரசாணையின் மூலமே சாத்தியமானது.
பல துறைகளில் வல்லமையும், நிறைந்த அனுபவமும் கொண்ட முன்னோடிகள் பலரும், ஒரு குழுவாக இணைந்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்குவதின் மூலம் சமூக மாற்றத்துக்கான செயல்திட்டங்களை அரசாணையில் இடம்பெறச் செய்வதற்கென்று, 'ஜஸ்ட் மேட்' என்றா ஒரு தன்னார்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான அமைப்புகள் மேலை நாடுகளில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜஸ்ட் மேட் தன்னார்வ அமைப்பில் 'போதி' நிறுவனத்தின் முனைவர் ந.ராஜ்மோகன், 'சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ்' அமைப்பின் எஸ். தீனதாயளன் ஆகியோரின் கூட்டு முயற்சியால், கல்வி, நீதித்துறை, நிர்வாகவியல்,சமூகப் பணியாற்றுவோர், மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றும் அனுபவம் வாய்ந்த முன்னோடிகள் அடங்கிய தன்னார்வ குழுவினருடன் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி 'ஜஸ்ட் மேட்' தன்னார்வ அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைப்பு தொடங்கப்பட்டதற்கான நோக்கமும் செயல்திட்டமும் ஆலோசிக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து சில மாற்றங்கள் கொண்டுவந்து செயல்படுத்துவதன் மூலம் கல்வி, வேலைவாய்ப்பின் வாயிலாகச் சமூக நீதியை நிலைநாட்டுவதே முக்கிய நோக்கம் என்று முனைவர் ராஜ்மோகன் விளக்கினார்.
இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சுதந்திரம், தமிழ் நாடு அரசின் மேனாள் நிதி செயலாளர் ஏ. எம் சுவாமிநாதன், நடிகர் மற்றும் மேலாண்மை ஆலோசகர் இராஜ கிருஷ்ணமூர்த்தி (கிட்டி), யூத் ஃப்ஃஃர் ஜாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் மீனா ஷெனாய், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் இராஜ சாமுவேல் மற்றும் பல்துறை அறிஞர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.