தேவையற்ற பணியிடங்களை கண்டறிய குழு: தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசுத் துறைகளில் தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிய குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, செலவினங்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊதியக் குழு குறித்த முடிவுகளின் முக்கிய அம்சங்களில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விவரம்: தமிழக அரசின் பல்வேறு செலவுகளைக் குறைத்திட பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர் நிலைகளை ஆய்வு செய்து அதில் தேவையற்ற பணியிடங்கள் கண்டறியப்படும்.
இத்தகைய பணியிடங்களில் வெளிமுகமை அல்லது ஒப்பந்த அடிப்படையில் முதல்கட்டமாக பணி நியமனங்களை மேற்கொள்ள உரிய பரிந்துரைகளை அளித்திட, பணியாளர் சீரமைப்புக் குழு உருவாக்கப்படும்.
ஓய்வுக்கு முன் இறந்தால்: அரசுப் பணியாளர் ஓய்வு பெறும் முன்பே இறக்கும்பட்சத்தில், அவர் இறுதியாக பெற்றுவந்த அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக ளிக்கப்படும். இது அடுத்த 10 ஆண்டுகளுக்கு அல்லது அந்தப் பணியாளர் 65 வயதை எட்டும் வரை இவற்றில் எது முன்னதோ அதுவரை அளிக்கப்படும்.
அதேபோன்று, ஒரு பணியாளர் ஓய்வுபெற்ற பிறகு இறக்கும்பட்சத்தில், அவர்ஓய்வு பெறும்போது அளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு இணையான குடும்ப ஓய்வூதியம், அந்தப் பணியாளரின் 65 வயது வரையில் அவருடைய குடும்பத்துக்கு அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.