பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத, போனஸ்
'தமிழகத்தில், லாபம் ஈட்டியுள்ள, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, 20 சதவீதம் வரை, தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015ன் படி, போனஸ் பெறுவதற்கு, சம்பள உச்ச வரம்பு, 21 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதை தளர்த்தி, அனைத்து, 'சி மற்றும் டி' பிரிவு தொழிலாளர்களுக்கு, 2016 - 17க்கான, போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவற்றின் விபரம்:
லாபம் ஈட்டியுள்ள, பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு, அந்த நிறுவனங்கள் ஒதுக்கும் உபரி தொகைப்படி, 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீத கருணைத் தொகை என, மொத்தம், 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். நஷ்டம் அடைந்துள்ள பொதுத்துறை நிறுவனங்களில், 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ், 1.67 சதவீதம் கருணைத்தொகை என, 10 சதவீத போனஸ் வழங்கப்படும்
தமிழ்நாடு மின் வாரியம், அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ், 11.67 சதவீதம் கருணைத் தொகை என, மொத்தம், 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
லாபம் ஈட்டியுள்ள, கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கு, ஒதுக்கப்படும் உபரி தொகைக்கேற்ப, 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை தரப்படும்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணிபுரியும், 'சி மற்றும் டி' பிரிவு பணியாளர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ், 1.67 சதவீதம் கருணைத் தொகை கிடைக்கும்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய, 'சி மற்றும் டி' பிரிவு பணியாளர்களுக்கு, 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும்
லாபம் ஈட்டியுள்ள, தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்களுக்கு, 20 சதவீதம்; லாபம் ஈட்டாத சங்க பணியாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்
தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, 4,000 ரூபாய்; தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தற்காலிக தொழிலாளர்களுக்கு, 3,000 ரூபாய் கருணைத்தொகை தரப்படும்
போனஸ் பெற தகுதியுள்ள, நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம், 8,400 ரூபாய்; அதிகபட்சம், 16 ஆயிரத்து, 800 ரூபாய் பெறுவர். மொத்தம், 3.69 லட்சம் தொழிலாளர்களுக்கு, 489.26 கோடி ரூபாய், போனசாக வழங்கப்படும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துஉள்ளார்.