குழந்தையை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை சிறையில் தள்ளுவேன்!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை, சிறையில் தள்ளி, உணவு, தண்ணீர் தராமல் பட்டினி போடுவோம்,'' என, உ.பி., மாநில, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர், ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூறியுள்ளார்.
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக உள்ள, ஓம் பிரகாஷ் ராஜ்பார், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், வேகமாக பரவுகிறது.
அதில், ராஜ்பார் பேசியதாவது: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோரை, ஐந்து நாட்கள், சிறையில் அடைப்போம். அவர்களுக்கு, சாப்பாடு, தண்ணீர் தராமல் பட்டினி போடுவோம். என் விருப்பப்படி, இந்த சட்டத்தை இயற்றப் போகிறேன். அடுத்த ஆறு மாதங்களில், இது தொடர்பாக, தக்க நடவடிக்கை எடுத்து, பெற்றோருக்கு புரிய வைப்பேன். ராவணனிடம் இருந்து, சீதையை மீட்டு வர, கடலில் பாலம் கட்ட, ராமர் முடிவு செய்தார்; கடல் அரசன் அனுமதி தரவில்லை. கோபம் அடைந்த ராமர், அஸ்திரங்களை செலுத்தி, கடல் அரசனை பணிய வைத்தார்.
அது போல், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோரும், கடும் நடவடிக்கை எடுத்தால் தான் திருந்துவர்; இதற்காக, எனக்கு பெரிய தண்டனை கிடைத்தாலும், ஏற்கத் தயார்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
இது பற்றி, நேற்று, நிருபர்கள் கேட்ட போது, ''தவறாக என்ன சொல்லிவிட்டேன்; என் கருத்தில், இப்போதும் உறுதியாகவே உள்ளேன்,'' என்றார், ராஜ்பார்.