நீட் எதிர்ப்பு போராட்டம்: முடிவுக்கு வந்தது வழக்கு
மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்படுவதாக, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மருத்துவக் கல்விக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்து, தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. இந்தப் போராட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது; இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்துவதற்கு தடை விதித்து, செப்., 8ல், உத்தரவிட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று(அக்.,9) விசாரணைக்கு வந்தது. அப்போது, 'உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கை பாதிக்கும் வகையில் தமிழகத்தில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடக்கவில்லை' என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக, உச்ச நீதிமன்றம் கூறியது.