அக்டோபர் 2-இல் மேட்டூர் அணை திறப்பு: சம்பா தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த முதல்வர் உத்தரவு
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 2 ஆம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொள்ள வசதியாக சிறப்பு தொகுப்புத் திட்டமும் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.29 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 47 ஆயிரத்து 235 கன அடியாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இப்போதுள்ள நீர் இருப்பைக் கருத்தில் கொள்வதுடன், இனி வரும் மாதங்களில் கர்நாடக மாநில நீர்த்தேக்கங்களில் இருந்து போதிய அளவு நீரும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின்படியும் மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக அக்டோபர் 2 ஆம் தேதியில் இருந்து பாசனத்துக்கு நீர் விடுவிக்கப்படும்.
சிறப்பு தொகுப்புத் திட்டம்: கடந்த ஓராண்டாக காவிரி ஆற்றை ஆதாரமாகக் விவசாயம் செய்ய போதுமான நீர் இல்லை. நிலத்தடி நீர் குறைந்த காரணத்தாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளின் சம்பா நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தொகுப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
ரூ.41.15 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியவற்றிலும், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, கரூர் மாவட்டங்களின் டெல்டா பகுதிகளிலும் அரசு செயல்படுத்தும்.
இதன்படி, விவசாயிகள் நேரடி விதைப்புக்கான தரிசு உழவுப் பணியினை மேற்கொள்வதற்கு மானியமாக ஏக்கருக்கு ரூ.500 வீதம் 5 லட்சம் ஏக்கருக்கு அளிக்கப்படும். விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக மானியமாக கிலோவுக்கு ரூ.10 வீதம் 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் விதைகளுக்கு மானியம் கொடுக்கப்படும்.
நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளும் இடங்களில் களை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பதால், களைக்கொல்லி மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.280 மானியமாக 2.5 லட்சம் ஏக்கருக்கு அளிக்கப்படும்.
நெல் சாகுபடி ஆயத்த பணிகளான உழவு மற்றும் நடவு மேற்கொள்ளும் வகையில் 620 இயந்திர உழுவைகள், ஒரு இயந்திரத்துக்கு ரூ.75 ஆயிரம் வீதம் மானியமாக அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
சம்பா பருவத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சம்பா நெல் சாகுபடிக்குத் தேவையான தரமான விதைகள், ரசாயன உரங்கள், உயிர் உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு இடுபொருள்களை இருப்பு வைத்து விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா பருவத்தில் நீண்ட கால நெல் ரகங்களை தவிர்த்து மத்திய மற்றும் குறுகிய கால நெல் ரகங்களை நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்து பயன் அடைய வேண்டும்.
விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் போதிய அளவு பயிர்க் கடன் அளிக்க அறிவுரை அளிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கும்போதே புதிய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசு அறிவித்துள்ள சம்பா தொகுப்புத் திட்டத்தை வெற்றிகரமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சம்பா பருவத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.