பிரீமியம் ரயில்களுக்கான கட்டண முறையை மாற்றியமைக்கத் திட்டம்
துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட பிரிமீயம் ரயில்களுக்கான கட்டண விதிப்பு முறையை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதிக கட்டணம் காரணமாக அந்த ரயில்களில் பல இருக்கைகள் முன்பதிவு ஆகாமல் இருப்பதால் இத்தகைய நடவடிக்கையை எடுக்க அரசு முன்வந்துள்ளது.
விமானங்களில் உள்ளது போல வளர்வீத முறையில் தற்போது பிரீமியம் ரயில்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி முதல் 10 சதவீத இருக்கைகளுக்கு வழக்கமான முன்பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படும். அதற்கு அடுத்த ஒவ்வொரு 10 சதவீத இருக்கைகளுக்கும் ரயில் கட்டணத்தில் இருந்து தலா 10 சதவீதம் உயர்ந்து கொண்டே இருக்கும். இறுதியாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்பவர்கள் வழக்கத்தை விட 50 சதவீதம் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த முறையை கடந்த ஆண்டு செப்டம்பரில் ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தபோதும், மத்திய அரசு அதனை அமல்படுத்தியது. இதன் காரணமாக ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.550 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. வருவாய் அளவில் இந்தத் திட்டம் வெற்றி என்றாலும், இறுதியாக உள்ள இருக்கைகளை முன்பதிவு செய்ய பயணிகள் முன்வருவதில்லை. இதனால், பெரும்பாலான பிரீமியம் ரயில்களில் பல இருக்கைகள் காலியாகவே செல்கின்றன.
இதைத் தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் கட்டணச் சுமையைக் குறைக்க ரயில்வே அமைச்சகம் முன்வந்துள்ளது. அதன்படி, வருவாயையும் இழக்காமல், அதேநேரத்தில் பயணிகளையும் இழக்காத வகையில் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் உள்ள கட்டண முறையை மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. இறுதியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கூடுதல் கட்டணச் சுமை ஏற்படாத வகையில் அதில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றார் அவர்.