பெங்களூரு மேயராக தமிழர் தேர்வு: கர்நாடகத் தமிழர்கள் மகிழ்ச்சி
பெங்களூர் மாநகராட்சியின் புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழர் சம்பத்ராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி.
பெங்களூரு மேயராக தமிழரான சம்பத்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு கர்நாடகத் தமிழர் மத்தியில் பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு மேயர்,துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் பெங்களூரில் உள்ள மாமன்றக் கட்டடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இத் தேர்தலை மண்டல ஆணையர் ஜெயந்தி, தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார். மேயர், துணை மேயர் பதவியைக் கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் மஜத இடையே கூட்டணி அமைக்கப்பட்டிருந்தது.
மேயர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக ஆர்.சம்பத்ராஜ், துணை மேயர் பதவிக்கு மஜத வேட்பாளராக பத்மாவதி இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பாஜக வேட்பாளர்களாக மேயர் பதவிக்கு முனுசாமி, துணை மேயர் பதவிக்கு மமதா வாசுதேவ் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நான்கு பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், யாரும் வேட்புமனுக்களை திரும்பப் பெற முன்வராததால், தேர்தலை நடத்த மண்டல ஆணையர் ஜெயந்தி அறிவிப்பு வெளியிட்டார்.
பாஜக மறியல்: தேர்தல் நடைமுறைகள் தொடங்கி, வாக்குகளைச் செலுத்துவதற்கு தயாரான போது மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான பத்மநாப ரெட்டி, 'தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. போலி வாக்காளர்களை காங்கிரஸ் சேர்த்துள்ளது. மேயர், துணை மேயர் பதவிகளைக் கைப்பற்ற காங்கிரஸ் சட்ட விரோதமாக போலி வாக்காளர்களின் துணையை நாடியுள்ளது' என்றார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. தேர்தல் நடத்துவதற்கு பாஜகவினர் இடையூறு செய்து வருகின்றனர். எனவே, பாஜக உறுப்பினர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்திதனர்.
தேர்தலை நடத்த முடியாமல் மண்டல ஆணையர் ஜெயந்தி திணறினார். தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜெயந்தி இருக்கையின் முன்பு திரண்ட பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கு எதிராக முழக்கமிட்டு வந்தனர். அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்த மறியல் போராட்டத்தைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைமுதல்வருமான ஆர்.அசோக் தலைமையில் பாஜக மாமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேயர் தேர்தல்: பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து கொண்டிருந்த போதே தேர்தல் நடைமுறைகளை ஜெயந்தி தொடங்கினார். மேயர் பதவிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆர்.சம்பத்ராஜுக்கு 139 வாக்குகளும், துணைமேயர் பதவிக்கான தேர்தலில் மஜத வேட்பாளர் பத்மாவதிக்கு 138 வாக்குகளும் கிடைத்தன.
தேர்தலில் வெற்றி பெற 134 வாக்குகள் போதுமானதாகும். அதைவிட கூடுதலாக வாக்குகள் பெற்றிருந்ததால் மேயராக ஆர்.சம்பத்ராஜ், துணை மேயராக பத்மாவதி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரியும், மண்டல ஆணையருமான ஜெயந்தி அறிவித்தார்.
குவிந்தன வாழ்த்துக்கள்: புதிய மேயர் ஆர்.சம்பத்ராஜ், துணை மேயர் பத்மாவதிக்கு முன்னாள் மேயர்கள் ஜி.பத்மாவதி, மஞ்சுநாதரெட்டி, அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, கே.ஜே.ஜார்ஜ், காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ், முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்ணான்டஸ், காங்கிரஸ் மற்றும் மஜத மாமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேயரான தமிழர்: பெங்களூரு தேவர்ஜீவனஹள்ளி வார்டில் இருந்து இரண்டாவது முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.சம்பத்ராஜ் பொறியியல் பட்டதாரி. காங்கிரஸ் கட்சியில் கடந்த 30 ஆண்டுகளாக பங்காற்றி வருகிறார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள ஆர்.சம்பத்ராஜ், பெங்களூரு மாநகராட்சியின் 51-ஆவது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
என்.கேசவ ஐயங்கார்(1950), வி.எஸ்.கிருஷ்ண ஐயர்(1962), ஜி.குப்புசாமி(1994-1995)ஆகியோரைத் தொடர்ந்து நான்காவது தமிழராக ஆர்.சம்பத்ராஜ், பெங்களூரு மாநகராட்சியின் மேயராகப் பதவியேற்றுள்ளார். 198 வார்டுகள் கொண்ட மாநகராட்சியான பிறகு தமிழர் மேயர் ஆவது இதுவே முதல்முறையாகும்.
பெங்களூரு மாநகராட்சியில் பெருவாரியாக தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், 23 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் ஒருவர் மேயராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழர்கள் ஆரவாரம்: தமிழரான ஆர்.சம்பத்ராஜ், பெங்களூரு மாநகராட்சி மேயரானதற்கு கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் தெரிவித்துள்ளனர்.
உலக பெருநகரமாக உருவெடுத்துள்ள பெங்களூரை தலைமை தாங்கி நடத்தும் பொறுப்பு தமிழரான ஆர்.சம்பத்ராஜ் கையில் கிடைத்துள்ளதற்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை, மைசூரு தமிழ்ச் சங்கம், கர்நாடக தமிழ்ச் சங்கக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏராளமான தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.