விதைகள் விருட்சமாகும்! விடுமுறை தினத்தில் விதைப்பந்து தயாரிப்பு
பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், விடுமுறை நாட்களை வீணடிக்காமல், விதைப்பந்து தயாரிக்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் ஆர்வத்துக்கு பச்சைக்கொடி காட்டி, ஆசிரியர்களும்
கைகோர்த்துள்ளதால், காலாண்டு விடுமுறையில், ஐந்தாயிரம் விதைப்பந்துகள் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இயற்கை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். இதை உணர்ந்த முன்னோர்கள், இயற்கையோடு இணைந்து வாழ்ந்ததால், அவர்களது காலம் பொற்காலமாக இருந்தது. பருவம் தவறாமல் மழை பெய்தது, பயிர் சாகுபடி சிறப்பாக இருந்தது. முன்னோர்கள் அடுத்த தலைமுறைக்கும் வளமான வாழ்வையும், இயற்கையையும் கொடுத்துச் சென்றனர்.
ஆனால், காலப்போக்கில் வளர்ச்சி திட்டங்கள், ரோடு விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டி சாய்க்க துவங்கியுள்ளதால், இயற்கையின் விரோதிகளாகி வருகிறோம். இதனால், பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறோம். பருவம் தவறாமல் பெய்த மழை; தற்போது பருவத்தில் பெய்வதில்லை.
மழையின்மையால், மூன்று ஆண்டுகளாக பாசன திட்டம் மற்றும் குடிநீர் திட்ட அணைகள் நிரம்பவில்லை. நிலத்தடி நீர்மட்டம் அதாலபாதாளத்துக்கு சென்றதால், ஆழ்குழாய் கிணறுகள், கிணறுகள் வறண்டன. விவசாயம், குடிநீர் ஆதாரங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனை, இயற்கையை பாதுகாக்க தவறியதற்கு தண்டனையாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு ஒரே தீர்வு மரம் வளர்ப்பது மட்டுமே. அதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கங்களில் மரம் வளர்க்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
அரசு துறைகளும் மரம் வளர்க்கும் திட்டத்தை ஊக்குவித்து, வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குகிறது. ரோடு விரிவாக்கத்துக்கு ஒரு மரத்தை வெட்டினால், பத்து மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என, நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
'மரங்கள் வளர்ப்போம்; மழை வளம் பெறுவோம்' என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், அரசு விழாக்களில் மரக்கன்று நடுவது அதிகரித்துள்ளது.
படிக்கும் மாணவர்களிடம், மரங்கள் வளர்ப்பு பயன் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு பராமரிப்பதை மாணவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படுத்துகின்றனர்.இந்நிலையில், விதை பந்துகள் தயாரித்து, ஆங்காங்கே துாவி செழிப்பான பகுதியாக மாற்ற மாணவர்கள், தன்னார்வ அமைப்புகள் ஈடுபாடு காட்டத் துவங்கியுள்ளனர். இத்திட்டத்தில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்கின்றனர்.
பொள்ளாச்சி அருகேயுள்ள அரசுப்பள்ளி மாணவர்கள், விடுமுறை நாட்களையும் பயனுள்ளதாக மாற்ற ஆசிரியர்களுடன் இணைந்து 'விதை பந்து' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது இயற்கை ஆர்வலர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும், 20 மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்று இரண்டு நாட்களில், இரண்டாயிரம் விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர்.
மாணவர்கள் கூறுகையில், 'மரம் நமக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கிறது. அதனை பாதுகாக்க எங்களால் முடிந்த சிறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, ஆசிரியர்கள் விதைப்பந்து தயாரிக்கலாம் என திட்டம் வகுத்து கொடுத்தனர்.
தேவையான மணல், செம்மண், விதைகளை ஆசிரியர்கள் கொடுத்தனர். அவற்றை உருண்டையாக உருட்டி பந்தாக தயாரித்து வருகிறோம். இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,' என்றனர்.
பள்ளி தலைமையாசிரியர் உமா மகேஸ்வரி, ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் கூறியதாவது:
மாணவர்களிடம் மரக்கன்று வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, விதைப்பந்து தயாரிக்கலாம் என முடிவு செய்தோம். இதற்கு தேவையான செம்மண், மணல், சாணம், வேப்பமர விதை போன்றவை தயார் செய்து வைத்தோம்.
செம்மண், மணல், சாணம் மூன்றையும் கலந்து பந்து போல உருட்டி, நடுவில் விதையை பதித்து, முழுவதும் மூட வேண்டும். இது குறித்து செயல்விளக்கம் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.
பள்ளியின் தேசிய பசுமைப்படை மாணவர்கள் விடுமுறை நாளிலும் தாங்களாக முன்வந்து ஆர்வமுடன் இப்பணியை செய்கின்றனர்.
விடுமுறை முடிவதற்குள், ஐந்தாயிரம் விதை பந்துகளை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். சேத்துமடை, பழைய சர்க்கார்பதியில், மூவாயிரம் விதைப்பந்தும், அங்கலகுறிச்சி, ஆழியாறு பகுதிகளில், இரண்டாயிரம் விதைப் பந்துகளையும் துாவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. விதைப்பந்துகள் வேண்டுவோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்.