வேலைவாய்ப்புக்கான பாடத்திட்டம் : செங்கோட்டையன் தகவல்
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்,'' என, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று மாலை தரிசனம் செய்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், கல்வித் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக, 412 தேர்வு மையங்கள் துவங்கப்படும். அடுத்த மாதம் முதல், அந்த மையங்கள் செயல்படும். மேலும் கூடுதல் மையங்கள் திறக்கப்படும்.
அதுபோல, 32 மாவட்டங்களின் தலைநகரங்களில், அரசு நுாலகங்களில், ஐ.ஏ.எஸ்., தேர்விற்கான நுால்கள் அளிக்கப்படும்.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். கற்றலுக்கு ஏற்றபடி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படும்.