உத்திரப்பிரதேச ராணுவ பள்ளியில் மாணவியர் சேர வாய்ப்பு
உத்திரப்பிரதேசத்தில் உள்ள, ராணுவ பள்ளியில், முதன்முறையாக, மாணவியரின் சேர்க்கைக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நாடு முழுவதும், ராணுவ பள்ளிகளில், நுழைவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடல் தகுதிக்கான மருத்துவ சோதனையில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ராணுவ கட்டுப்பாட்டுடன் நடத்தப்படும் இந்த பள்ளிகளில், படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், உ.பி., மாநிலம், லக்னோவில் உள்ள, நாட்டின் முதல் ராணுவ பள்ளியில், வரும் கல்வியாண்டு முதல், மாணவியரும் சேர்க்கப்பட உள்ளனர். இது குறித்த அறிவிப்பு, உ.பி., ராணுவ பள்ளி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: வரும் கல்வியாண்டில், 9ம் வகுப்பிற்கு மாணவியரும், 7ம் வகுப்பிற்கு மாணவர்களும், 'ஆன் - லைன்' மூலம், அக்., 31 வரை விண்ணப்பிக்கலாம். நவ., 2க்குள், 600 ரூபாய் தேர்வுக் கட்டணத்தை, 'இ - சலான்' மூலம் செலுத்த வேண்டும். நவ., 4 வரை, விண்ணப்பதாரர்கள், தங்களுடைய, இ - சலான் மற்றும் ஆன் - லைன் நுழைவு படிவத்தில் உள்ள பிழைகளை திருத்திக் கொள்ளலாம். டிச., 15 முதல், நுழைவுத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, ஆன் - லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, 2018 ஜன., 14ல், லக்னோ, வாரணாசி, மீரட், ஆக்ரா, அலகாபாத், பரேலி, பைசாபாத், கோரக்பூர், ஜான்சி ஆகிய, ஒன்பது மையங்களில் நடத்தப்படும். ஜன., இறுதியில், நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை, பிப்., 10க்குள் நடத்தப்படும். இவற்றில் தேர்ச்சி பெறும், மாணவ - மாணவியருக்கு, இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.