கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைக்கு அரசு பணி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதன்முறையாக, ஓசூரைச் சேர்ந்த திருநங்கைக்கு, அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, பெண்கள் தாய் விழுதுகள் அறக்கட்டளை அமைப்பில், திருநங்கையர் உட்பட, 300 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அமைப்பில் உள்ள தகுதியானவர்களுக்கு, அரசு வேலை கேட்டு, ஆறு மாதங்களுக்கு முன், அமைப்பின் தலைவர் கீதா, மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார்.
கலெக்டர் கதிரவன் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின், ஓசூரைச் சேர்ந்த திருநங்கை சதீஷ், 30, என்பவருக்கு, பேரிடர் மேலாண்மை துறையில், அலுவலக உதவியாளராக பணி ஒதுக்கி, அதற்கான ஆணையை, கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முதன்முறையாக, திருநங்கைக்கு, அரசு வேலை வழங்கப்பட்டுஉள்ளது.
இதேபோல், ஓசூரைச் சேர்ந்தவர், திருநங்கை ரீமா, 29. இவர், 'ஸ்மார்ட் கார்டு' கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவருக்கு நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர் கூட்டத்தில், ஸ்மார்ட் கார்டை, கலெக்டர் வழங்கினார்.