குறைந்தபட்ச இருப்பு தொகை : SBI புதிய அறிவிப்பு
சேமிப்பு கணக்குகளில், குறைந்தபட்ச மாதாந்திர இருப்புத் தொகையை குறைத்து, 'பாரத ஸ்டேட் பேங்க் ' அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த ஏப்ரல் மாதம், சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை புதிதாக நிர்ணயித்தது. மாநகரங்களில், 5,000ரூபாய்; நகர் மற்றும் பேரூராட்சிகளில், 3,000ரூபாய்; கிராமங்களில், 1,000 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை மாற்றி அமைக்கும்படி, தேசிய வங்கிகளின் குழுமம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, மாநகரங்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை, 5,000 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக குறைத்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா' அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நகர், பேரூராட்சி, கிராமங்களிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு, குறைந்தபட்ச இருப்புத் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
மேலும், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கான அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. மாநகரம், நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இனி, 30 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை விதிக்கப்படும். பேரூராட்சி மற்றும் கிராமங்களில், 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.