ஸ்மார்ட் ரேஷன் கார்டு சப்ளை : சிறப்பு முகாம் நடத்த உத்தரவு
இந்த மாதத்திற்குள், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் பணியை முடிக்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தும்படி, அதிகாரிகளுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், காகித ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள, 1.93 கோடி ரேஷன் கார்டுகளில், இன்னும், 20 லட்சம் பேருக்கு, கார்டுகள் வழங்க வேண்டும்.
இது குறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏப்ரல் மாதம் துவங்கிய, ஸ்மார்ட் கார்டு பணிகளை, ஜூனில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பலரின் ஆதார் விபரங்கள் சரியாக இல்லாததால், கூடுதல் அவகாசம் தேவைப்பட்டது. தற்போது, மக்களுக்கு வழங்கியது, ரேஷன் கடைகளுக்கு அனுப்பியது போக, 20 லட்சம் ஸ்மார்ட் கார்டுகள் தான் அச்சிட வேண்டும்.
அவர்களின் விபரங்கள் சரியாக இல்லாததால், அச்சிடப்படவில்லை. அதில், சென்னை மற்றும் புறநகரில் இருப்போர் தான் அதிகம். இதனால், அரசு பள்ளி, சமூக நலக்கூடம் என, தினமும், ஒரு இடத்தில், சிறப்பு முகாம் நடத்தும்படி, உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கார்டு கிடைக்காதோர், முகாமில் பங்கேற்றால், உடனே வழங்க வழிவகை செய்யப்படும்