போதையில் வாகனம் ஓட்டினால் 15 நாள் சிறை!
'போதையில் வாகனம் ஓட்டினால், 15 நாள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில், வாகன ஓட்டுனர்கள், அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை, அரசு கட்டாயமாக்கி உள்ளது.
விபத்து தடுப்பு நடவடிக்கையாக, போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது, வழக்கு பதிந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. சாலை பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்ற குழு, போதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், அதிக பாரம் ஏற்றுதல், சிக்னல் விதிமீறல் என, ஆறு வகையான குற்றச்செயலில் ஈடுபடுவோரின், ஓட்டுனர் உரிமத்தை, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்ய அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு, ஜனவரியில் இருந்து, செப்., 2 வரை, 14 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 16 கோடி ரூபாய் அபராத தொகையை, போலீசார் வசூலித்து உள்ளனர்.
போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஆறு விதமான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து, அசல் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய, நீதிமன்றம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்வோம்.
அதேபோல, அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்தபின், இதுவரை, 8,400 பேரின், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 15 நாட்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் வகையில், வழக்கு பதிவு செய்யப்படும்.