மைக்ரோ ஏ.டி.எம்.,முடன் தபால்காரரை களமிறக்க திட்டம் புதுமை!
வரும், 2018, மார்ச் முதல், பல்வேறு நிதி பரிவர்த்தனைகளை, தபால்காரர் எடுத்து வரும், நவீன சாதனம் மூலம் நிறைவேற்றும் வகையில், புதிய திட்டத்தை அமல்படுத்த, தபால் துறை முடிவு செய்துள்ளது.
இந்திய தபால் துறை, 'பேமென்ட் பேங்க்' எனப்படும், வங்கி சேவையை நடத்தி வருகிறது.
ரிசர்வ் வங்கி அனுமதியுடன் நடத்தப்படும், இந்த சேவையில், வாடிக்கையாளர்கள், அதிகபட்சம், ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த தொகை, வருங்காலத்தில், அதிகரிக்கப்படலாம்.இவ்வகை வங்கிகள், கடன் தரவோ, கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகளை வினியோகிக்கவோ முடியாது.
இந்நிலையில், 2018, மார்ச் முதல், நாடு முழுவதும், வீட்டுக்கு வீடு, நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், புதிய திட்டத்தை துவக்க, தபால் துறை முடிவு செய்துள்ளது.தபால்களை பட்டுவாடா செய்ய வரும், தபால்காரர், மைக்ரோ, ஏ.டி.எம்., சாதனத்தை கையில் எடுத்து வருவார். அந்த சாதனத்தில், பயோமெட்ரிக் ரீடர், பிரின்டர், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ரீடர் உள்ளிட்டவை இணைக்கப்பட்டிருக்கும்.
நாடு முழுவதும், தபால்காரர்கள் எடுத்துச் செல்லும் வகையில், இரண்டு லட்சம் மைக்ரோ, ஏ.டி.எம்.,களை வாங்க, தபால் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, 'டெண்டர்' விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் உதவி செய்ய, எச்.பி., நிறுவனம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் தலைமை நிர்வாகி, ஏ.பி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:பணப் பரிவர்த்தனைகளை, வங்கிகள் மூலம், நெறிமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, எல்லா வீடுகளிலும், பணப்பரிவர்த்தனைகளை, டிஜிட்டல் முறையில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்க, மைக்ரோ, ஏ.டி.எம்., எனப்படும், நவீன டிஜிட்டல் சாதனங்கள் வாங்கப்பட உள்ளன.
இந்த சாதனங்கள், தபால்காரர்கள் மூலம், ஒவ்வொரு வீட்டையும் சென்றடையும். சமையல் காஸ், மின்சாரம், மொபைல், டி.டி.எச்., சேவை, பள்ளி கட்டணம் போன்ற, 10க்கும் மேற்பட்ட செலவுகளுக்கு, இந்த சாதனங்கள் மூலம், பணம் செலுத்த முடியும். இதற்கான, 'மொபைல் ஆப்' உருவாக்கும் நடவடிக்கையையும், இந்தியா போஸ்ட் மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.