அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் சிறை தண்டனை தேவையற்றது: உயர் நீதிமன்றம் கருத்து
வாகன சோதனையின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இவ்வாறு அறிவுறுத்தியது.
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ரஜீந்தர் சிங் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு சட்டவிரோதமானது. ஏனெனில் சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் அசல் உரிமத்தை வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுதான் பணி வழங்குகின்றனர். இவர்களின் அசல் ஓட்டுநர் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து சரக்குப் பொருட்கள் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதால் தகுதியான ஓட்டுநர்களைத்தான் எங்களது வாகனங்களுக்கு நியமிக்கிறோம்.
தொலைதூர பயணங்களின்போது வாகன ஓட்டிகளின் உடைமைகள் திருடுபோகவோ அல்லது தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில் அசல் உரிமம் இல்லை என்றால், அதனால் ஏராளமான சட்ட சிக்கல்கள் ஏற்படும். மேலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே உள்ள ஒரே பிணைப்பு இந்த அசல் ஓட்டுநர் உரிமம் மட்டுமே. எனவே, 'செப்டம்பர் 1 -ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர்அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வெளிநாடுகளுக்குச் செல்ல அசல் கடவுச்சீட்டு அவசியம் என்பது போலத்தான், வாகன ஓட்டுநர்களுக்கு அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் என்பதும். இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி, இதனால் ஏற்படும் இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்றனர்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்குரைஞர்கள், 'அசல் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டுவது என்பது சட்டப்படி தவறு. ஆனால், அசல் ஓட்டுநர் உரிமம் பெற்றுவிட்டு, அதை மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றவர்களுக்கு 3 மாத சிறை தண்டனை என்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. அதற்கு சட்டத்திலும் இடமில்லை' என்றனர்.
இதையடுத்து நீதிபதிகள், அசல் ஓட்டுநர் உரிமம் பெறாமல் வாகனங்களை ஓட்டினால் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். அதன்படி அவர்களுக்கு அரசு அறிவித்தபடி 3 மாத சிறை தண்டனையை வழங்கலாம். ஆனால் அசல் ஓட்டுநர் உரிமம் இருந்தும், அதை சோதனையின் போது வைத்திருக்கவில்லை என்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகாது. எனவே, அதற்கு சிறைத் தண்டனை விதிக்கத் தேவையில்லை. சட்டப்படி அபராதம் விதித்தால் போதுமானது என கருத்து தெரிவித்து, இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு வெளியிடப்படும் எனக் கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.