தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு
இது தொடர்பாக, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். இந்த போனஸ் மற்றும் கருணைத் தொகை, போனஸ் சட்டத் திருத்தம் 2015–ன்படி, ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்குக் கிடைக்கும்.
முன்னதாக ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே மாத ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாநில போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை உற்பத்திக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வன பயிர்க் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான போனஸ் அறிவிப்பு, தலைமைச் செயலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் கடந்தாண்டு வழங்கப்பட்டதுபோல தனியாக வெளியிடப்படும்.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் தொடர்பாக தனியாக ஆணைகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.