மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடாது? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
‘நீட்’ தேர்வு போராட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏன் விழிப்புணர்வு ஏற்படுத்த கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வினால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மாணவர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தி இருந்தால் மாணவி அனிதாவின் மரணத்தை தடுத்து இருக்கலாம் என்று கூறி, கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி கிருபாகரன், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளன? இதில் அரசியல் கட்சியினர் எத்தனை போராட்டங்களை நடத்தி உள்ளனர்? அவை அமைதியான முறையில் நடத்தப்பட்டதா?
மாணவர்கள் ஈடுபட்ட போராட்டங்கள் எத்தனை? இதுதொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? போராட்டத்தை வேறு ஏதேனும் தனியார் அமைப்புகள் தூண்டிவிடுகிறதா?
‘நீட்’ தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பாகவும், ‘நீட்’ தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழக அரசு மாணவர்களுக்கு ஏன் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை? போராட்டம் காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏன் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடாது?
‘நீட்’ தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்த விவரம் சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் உள்ளன. அத்தகைய கேள்விகள் அடங்கிய புத்தகம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு இன்று(புதன்கிழமை) பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.