9 துணை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது:
நீட் தேர்வால் கட்ஆப் மார்க் 199 ஆக உயர்வு
பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிஏஎஸ்எல்பி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கல்வி இயக்ககம் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்துகிறது. 9 துணை மருத்துவ படிப்புகளுக்கு அரசுக் கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. இதற்கான விண்ணப்ப விற்பனை ஆகஸ்ட் 6ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடிந்தது. 26,460 பேர் விண்ணப்பித்ததில் 25,293 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. துணை மருத்துவ கலந்தாய்வு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்நோக்கு மருத்துவமனை வளாக அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. காலை 9, 11 மணி, மதியம் 2 மணி என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடந்தது.
தர வரிசையில் 199 முதல் 184.75 வரை கட் ஆப் பெற்ற முதல் 1,261 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 10ம் தேதியுடன் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிகிறது.மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதாத பல தமிழக மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகள், கால்நடை மருத்துவம், பிஎஸ்சி அக்ரி உள்ளிட்ட பிற படிப்புகளில் சேர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீட் தேர்வு நடைமுறையால் மருத்துவ மாணவர் சேர்க்கை மறுக்கப்பட்டுள்ள நிலையில், துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்விலும் ஏராளமான மாணவிகள் பங்கேற்று இடம் தேர்வு செய்தனர். கடந்த ஆண்டு துணை மருத்துவ படிப்புகளுக்கான அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண் 196 ஆக இருந்த நிலையில், நீட் தேர்வு நடைமுறையால் இந்த ஆண்டு அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண் 199 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.