விவசாயிகளின் வருவாய் உயர்த்த திட்டம் : தமிழகத்திற்கு முக்கியத்துவம்
விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டத்தில், தமிழகத்தையும், மத்திய அரசு சேர்த்துள்ளது. வறட்சி, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை காரணங்களால், நாடு முழுவதும் வேளாண் தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். கடன் பிரச்னை, மகசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால், விவசாயிகள் தற்கொலை செய்வது, அதிர்ச்சியில் இறக்கும் சம்பவங்கள், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.
இதற்கு தீர்வு காணும் வகையில், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதன்படி, 2022க்குள், விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தில், தமிழகத்திற்கு, மத்திய அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது.
இது குறித்து, தமிழக வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தாண்டு, அசாம், பீஹார், ஜார்க்கண்ட், ம.பி., மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழகம், உ.பி., மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக அதிகரிக்கும் திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது. பிரதமர் பெயரிலான, பல்வேறு வேளாண் மேம்பாட்டு திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதற்காக, ஒவ்வொரு மாநிலத்திற்கும், பல கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. தென் மாநிலங்களில், தமிழகம் மட்டுமே இத்திட்டத்தில் இடம் பெற்று உள்ளது. மத்திய அரசு, தமிழக விவசாயிகள் மீது அதிக அக்கறை காட்டுவதையே இது காட்டுகிறது