அரசு மருத்துவமனைகளில் மாஸ் கிளீனிங்
மருத்துவக் கல்வி இயக்குனரகம், அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ள வேண்டிய துாய்மைப் பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தெரிவித்துள்ளது. பல மருத்துவமனைகளில், இப்பணி முறையாக நடக்க வில்லை என புகார் எழுந்தது.இதையடுத்து, சுகாதாரத் துறை செயலர், அனைத்து மருத்துவமனைகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'அனைத்து மருத்துவமனைகளும், முழுவீச்சில், 'மாஸ் கிளீனிங்' மேற்கொள்ள வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனை, 'டீன்' அசோகன் கூறியதாவது: மருத்துவக் கழிவுகள் மேலாண்மையை கடைப்பிடிக்க, அந்தந்த துறை தலைவர்கள், இதற்கான தனி அலுவலரை நியமித்து, அவர்கள் மூலம், அந்தந்த துறையில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையின் இருப்பிட மற்றும் உதவி இருப்பிட மருத்துவ அலுவலர் தலைமையில் கூட்டம் நடத்தி, இப்பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்; இப்பணிகள் மூலம், மருத்துவமனைகளில், கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என, சுகாதாரத் துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில், துாய்மைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.