பி.எட்., கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை
'பாடம் நடத்தாத, பி.எட்., கல்லுாரிகளில் சேர வேண்டாம்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இணைப்பில், ௬௯௦ பி.எட்., மற்றும், எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், இரண்டாண்டு, பி.எட்., மற்றும், எம்.எட்., படிப்பில், லட்சத்துக்கும் அதிகமானோர் படிக்கின்றனர். பி.எட்., சேரும் பலர், பள்ளி மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியபடியே படிப்பது வழக்கம். இதை, சில கல்லுாரிகள் தவறாக பயன்படுத்தி, 'வகுப்புக்கே வர வேண்டாம்; பட்டம் தருகிறோம்' எனக்கூறி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது குறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டு உள்ள எச்சரிக்கை:
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., சேருவோர், ஆண்டுக்கு தலா, ௨௦௦ நாட்கள் வகுப்புக்கு வர வேண்டும். ஆனால், சில கல்லுாரிகளின் பிரதிநிதிகளும், ஏஜன்ட்களும், 'வகுப்புக்கே வராமல், தேர்வு மட்டும் எழுதினால் போதும்' எனக்கூறி, மாணவர்களை சேர்க்கின்றனர். இதற்காக, கூடுதலாக கட்டணம் பெறுவதாக, பல்கலைக்கு தகவல்கள் வருகின்றன. பல்கலை விதிகளுக்கு மாறாக, கட்டணம் வசூலிப்பதும், மாணவர்களை சேர்ப்பதும் தண்டனைக்குரிய குற்றம். எனவே, பொய்யான வாக்குறுதியை நம்பி, தனியார் கல்லுாரிகளில் சேர வேண்டாம். அப்படி சேர்ந்து, பட்டம் கிடைக்காவிட்டால், அதற்கு பல்கலை பொறுப்பாகாது.
மேலும், மாணவர்கள் வகுப்புக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் நீக்கப்படுவதுடன், அந்த கல்லுாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.