தனி இயக்குனரகமாகிறது பழங்குடி ஆய்வு நிறுவனம்
பழங்குடியினர் ஆய்வு நிறுவனங்கள், தனி இயக்குனரக அதிகாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளதால், அதன் செயல்பாடுகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. நாட்டில், 14 மாநிலங்களில், பழங்குடியினர் ஆய்வு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அந்தந்த மாநிலங்களில் செயல்படும், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில், அவை செயல்பட்டு வந்தன. நிறுவன செயல்பாடுகளுக்கு, மாநில அரசின் நிதி உதவியுடன், மத்திய அரசும் நிதி ஒதுக்கி வந்தது. தமிழகத்தில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில், பழங்குடியினர் ஆய்வு மையம் செயல்படுகிறது. இங்கு, மாநிலத்தில் உள்ள, 36 பழங்குடியினர் குறித்த ஆய்வுகள், அவர்களின் நலன் காக்கும் விஷயங்கள் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பழங்குடியினர் ஆய்வு நிறுவனம் தனியாக பிரிக்கப்பட்டு, தனி இயக்குனரக கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், பழங்குடியினர் ஆய்வு நிறுவனங்கள், தனி அதிகாரத்துடன் செயல்படும். பழங்குடியினர் ஆய்வு சார்ந்த விஷயங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் எனவும், காலப் போக்கில், இத்துறை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.