அரசு பள்ளிகளுக்கு நீட் பயிற்சி புத்தகம்
'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரை, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகங்கள் மேம்பாடு மற்றும் புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும், 25 ஆயிரம் ரூபாய் நிதி தரப்படுகிறது.
இந்த நிதியில், நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படும். ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாத புத்தகங்களை, தனியாரிடம் வாங்கி கொடுத்ததால், பண விரயம் ஏற்பட்டதுடன், மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி சரியாக கிடைக்கவில்லை.
இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த ஆண்டு, அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நுழைவுத் தேர்வு பயிற்சி புத்தகங்களை வழங்க, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.