துணை மருத்துவம்: பொதுப் பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு
துணை மருத்துவப் படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை (செப்.20) முதல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிஓடி (இயன்முறை மருத்துவம்), பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியா மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்டோமெட்ரி, இளநிலை ஆக்குபேஷனல் தெரப்பி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் பட்டப் படிப்பு) ஆகிய 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மொத்த இடங்கள்: இந்தப் படிப்புகளுக்கு 16 அரசுக் கல்லூரிகளில் 538 இடங்களும், 159 தனியார் கல்லூரிகளில் 5,726 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. முதல்நாளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. சிறப்புப் பிரிவினரில் மாற்றுத்திறனாளிகளுக்கு 23 இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 3 இடங்களும் உள்ளன.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் 35 பேர் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 3 இடங்களும் நிரம்பின. மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்களில் 15 நிரம்பின. மீதமுள்ள 8 இடங்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வில் சேர்க்கப்படும்.
பொதுப் பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு: துணை மருத்துவப் படிப்புகளில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை (செப்.20) முதல் தொடங்க உள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கி, மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறும்.
தொடர்ந்து செப்டம்பர் 21 முதல் 23, 25 முதல் 27, அக்டோபர் 4 முதல் 7 என மொத்தம் 12 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.