இங்கிலாந்துக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் உயர்வு
இங்கிலாந்துக்குப் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 9 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து துணைத் தூதர் பரத் ஜோஷி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
இங்கிலாந்தில் படித்துவிட்டு தங்களது சொந்த நாட்டில் பணியாற்றுவதற்காக, எதிர்கால தலைவர்களை உருவாக்கும் வகையில் 'செவனிங்' என்ற கல்வித் திட்டத்தை இங்கிலாந்து அரசு பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், இந்தியாவில் இருந்து முதுநிலை பட்டப்படிப்புகள் (ஒரு ஆண்டு), நிதி சேவைகள், இதழியல், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு 120 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் மாணவ , மாணவிகளுக்கு முழு உதவித்தொகை வழங்கப்படும். வரும் 2018 - 19 ஆம் கல்வியாண்டில் படிப்பதற்காக நவம்ப 7 - ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதி: இங்கிலாந்தில் உள்ள 122 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க, இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இங்கிலாந்தில் கல்வி படிப்பை நிறைவு செய்துவிட்டு, 2 ஆண்டில் சொந்த நாடு திரும்புபவராக இருக்க வேண்டும். மேலும் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருப்பதுடன், 2 ஆண்டு பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களை www.chevening.org/India என்ற இணையதள முகவரியில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
கடந்த 2016 -ஆம் ஆண்டு, இந்தியாவில் இருந்து 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'செவனிங்' திட்டத்தின்படி கல்வி படித்தனர். இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து வெறும் 5 சதவீதம் மாணவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.
விசா அதிகரிப்பு: தமிழகத்தில் இருந்து முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் கல்வி பயிலுவதற்கான திட்டத்துக்கு அதிகமானோர் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டின்படி, தாற்காலிக வணிக நோக்கம், இங்கிலாந்துக்கு சுற்றுலா செல்வதற்கு என 4.14 லட்சம் பேருக்கு பார்வையாளர் விசா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல 11,700 மாணவர்களுக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் வேலை நிமித்தமாக 60 ஆயிரம் பேருக்கும் விசா வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இங்கிலாந்தில் பணிக்காக வழங்கப்படும் விசாவில், 3 இல் 2 பங்கு இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இங்கிலாந்துக்குப் படிப்பதற்காகச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 9 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார் பரத் ஜோஷி.