ஓபிசி பிரிவினருக்கான கிரீமிலேயர் உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு
இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்சவரம்பு (கிரீமிலேயர்) ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், 'கிரீமிலேயர்' என்ற வருமான அளவுகோல் உள்ளது. இந்தப் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகள், கல்வி உள்ளிட்டவற்றில் இடஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது.
இதுவரை, ஒபிசி பிரிவினருக்கான 'கிரீமிலேயர்' உச்சவரம்பு ரூ. 6 லட்சமாக இருந்தது. அதாவது, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சமும், அதற்கும் மேல் இருப்பவர்கள், மற்ற ஓபிசி வகுப்பினரைப் போல இடஒதுக்கீட்டுப் பலன்களை அனுபவிக்க முடியாது.
இதனிடையே, இந்த கிரீமிலேயர் உச்சவரம்பினை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகமும் இதே கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்தது.
இதனையடுத்து, ஓபிசி பிரிவினருக்கான கிரீமிலேயர் உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்துவது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, அரசின் இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் வழங்கியது.
உச்சவரம்பு அதிகரிப்பு: இந்நிலையில், ஓபிசி பிரிவினருக்கான 'கிரீமிலேயர்' உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக நீதியை உறுதி செய்வதற்காகவும், ஓபிசி பிரிவினரில் பெரும்பாலானோரை இடஒதுக்கீட்டு வரம்புக்குள் கொண்டுவரும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1993-ஆம் ஆண்டு ஓபிசி வகுப்பினருக்கான கிரீமிலேயர் உச்சவரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், 2004-ஆம் ஆண்டு இது ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. பிறகு, 2008-ஆம் ஆண்டு இது 4.5 லட்சமாகவும், 2013-ஆம் ஆண்டு ரூ.6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டது.