வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும் ஆதார் கட்டாயம்?
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும், 'ஆதார்' கட்டாயமாக்கப்பட உள்ளது.
வங்கி, 'காஸ்' மானியம், பான் கார்டு, சிம் கார்டு மற்றும் பல்வேறு நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 'சமூக நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு, டிச., 31க்குள் ஆதாரை பதிவு செய்ய வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்களுக்கு, ஆதாரை கட்டாயமாக்கும்படி, அமைச்சகங்களுக்கு இடையேயான கமிட்டி, மத்திய வெளியுறவுத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை திருமணம் செய்யும் இந்திய பெண்களில் சிலர், கணவரால் கைவிடப்படுதல், வரதட்சணை கொடுமை ஆகியவற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய குற்றங்களில் ஈடுபடும், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களை கண்டுபிடிப்பதே கடினமாக உள்ளது.
இந்திய பெண்கள் மீதான குற்றங்களைத் தடுப்பதற்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள், திருமணத்தை பதிவு செய்ய, ஆதாரை கட்டாயமாக்கும்படி, பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆதார் மூலமாக, குற்றச்செயல்களில் ஈடுபடும், வெளிநாடு வாழ் இந்தியர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தன