அனைவருக்கும் வீடு திட்டம் செப்., 30ல் ஆய்வு நிறைவு
'மத்திய அரசின், அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், 2022க்குள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், தமிழகத்தில், ஏழை மக்களுக்கு, இலவச வீடு கட்டும் திட்டத்தை, குடிசை மாற்று வாரியம் செயல்படுத்த உள்ளது. இதற்கான பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் குடிசை மாற்று வாரியம் வாயிலாக நடக்கிறது. இதில் ஏராளமானோர், ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டது. எனவே, வீட்டுவசதி திட்டத்துக்கு வந்த விண்ணப்பங்களை, தமிழக அரசு ஆய்வு செய்ய, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், பிரதமரின் வீட்டுவசதி திட்ட செயல்பாடு குறித்து, மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், விண்ணப்பங்கள் ஆய்வு, தேவையான வீடுகளின் எண்ணிக்கை குறித்த இறுதி அறிக்கை தயாரிக்க, மத்திய குழு அறிவுறுத்தியது. விண்ணப்பங்களின் உண்மை தன்மை குறித்த ஆய்வு பணிகளை, செப்., 30க்குள்ளும், தேவையான வீடுகள் எண்ணிக்கை குறித்த அறிக்கை, அக்., இறுதிக்குள் முடிக்கப்படும் என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.