மின் நிலைய மாசு குறைப்பு : வாரியத்திற்கு அழைப்பு
அனல் மின் நிலையங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு அளவை குறைப்பது தொடர்பாக ஆலோசிக்க, பெங்களூரு வருமாறு, மின் வாரியத்திற்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசு மின் வாரியத்திற்கு, துாத்துக்குடி, மேட்டூர், வட சென்னை, மேட்டூர் விரிவாக்கம், வட சென்னை விரிவாக்கம் ஆகிய, ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக, நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதை எரிக்கும் போது வெளியாகும் புகையில், சாம்பல் உள்ளிட்ட, வேதி பொருட்கள் உள்ளன. இவை, அதிகமாக இருப்பதால், சுற்றுச்சூழல் மாசடைகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க, மின் வாரியத்திற்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: வட சென்னை, மேட்டூர், துாத்துக்குடி மின் நிலையங்கள், 2003க்கு முன் அமைக்கப்பட்டவை. மேட்டூர் விரிவாக்கம், வட சென்னை விரிவாக்க மின் நிலையங்கள், 2014ல் செயல்பாட்டில் வந்தன. இவை அனைத்திலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிர்ணயித்துள்ள விதிகளின் படி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இருப்பினும், வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தில் இருந்து வெளி வரும் புகையில், 'நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு' அளவு சற்று அதிகம் உள்ளது. இவற்றை குறைக்கும் பணி, மத்திய அரசின், 'பெல்' நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனல் மின் நிலையங்களில் கடைப்பிடிக்க வேண்டிய, புதிய விதிகளை, மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. அவற்றை செயல்படுத்துவதற்காக, மத்திய மின் துறை அமைச்சகம், கர்நாடகாவில் உள்ள, பெங்களூரில், 18ம் தேதி, சிறப்பு கூட்டம் நடத்த உள்ளது. அதில், வாரியத்தின் மின் உற்பத்தி பிரிவு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.