கைவினைஞர்கள் பதிவுக்காக வீடு தேடி செல்லும் பூம்புகார்
தமிழக கைவினைஞர்களை தேடிச் சென்று, அவர்களின் முழு விபரங்களையும், இணையதளத்தில் பதிவு செய்யும் திட்டத்தை, விரைவில் துவக்க உள்ளதாக, பூம்புகார் நிறுவனம் அறிவித்துள்ளது. கைவினைஞர்களுக்காக, www.tnartisaan.com என்ற இணையதளத்தை, மே மாதம், தமிழக அரசு துவக்கியது. அதில், கைவினைஞர் களின் விபரங்களை பதிவு செய்யும் முயற்சியில், தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகமான, பூம்புகார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும், 17 மையங்களில், சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில், 1,000க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அடுத்தகட்டமாக, கைவினைஞர்களை தேடிச் சென்று பதிவு செய்ய, பூம்புகார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, பூம்புகார் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், லட்சத்திற்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் உள்ளனர். அவர்களை, 35 பிரிவாக தரம் பிரித்துள்ளோம். அவர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு உள்ளன. கைவினைஞர்களில் மாற்றுத்திறனாளிகள், மனநலன் பாதிக்கப்பட்டோரும் உள்ளனர். எனவே, கைவினைஞர்களை வீடு தேடிச் சென்று, பதிவு செய்யும் திட்டம் துவக்கப்பட உள்ளது. இதில், பதிவு செய்வோருக்கு, அடையாள அட்டை வழங்கப்படுகிறது; பதிவு செய்தால் மட்டுமே, அரசின் பல்வேறு உதவிகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.