இ - சேவை மையங்களில் ஸ்மார்ட் கார்டு திருத்தம்
தமிழகத்தில் உள்ள, 'இ - சேவை' மையங்களில், மூன்றரை மாதங்களில், 5.25 லட்சம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகளில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு எனப்படும், மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போனாலோ, சேதமடைந்தாலோ, அரசு இ - சேவை மையங்களில், மாற்று அட்டை பெறலாம். ஸ்மார்ட் கார்டில், குடும்ப உறுப்பினர் பெயர் நீக்குதல், வகை மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் போன்றவற்றுக்கும், மக்கள் விண்ணப்பிக்கின்றனர். அதற்கு, வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் அளித்ததும், சம்பந்தப்பட்ட மனுதாரரின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். பின், இ - சேவை மையங்களில், அதை காண்பித்து, திருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளை, 30 ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்திற்கு, மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது, திருத்தம் கோரி, தினசரி, 8,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். ஜூனில் இருந்து, இதுவரை, 5.25 லட்சம் பேர், ஸ்மார்ட் கார்டு தொடர்பாக, விண்ணப்பித்து பயன் பெற்றுள்ளனர். இதன் வாயிலாக, 1.57 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.