சாலை விரிவாக்கத்துக்கு நிலம் தந்தால் ஐந்து மடங்கு எப்.எஸ்.ஐ., கிடைக்கும்
சாலை விரிவாக்க திட்டங்களுக்காக, நிலம் அளிக்கும் மனை உரிமையாளர்கள், மீதமுள்ள நிலத்தில் கட்டும் கட்டடங்களுக்கு, ஐந்து மடங்கு வரை, எப்.எஸ்.ஐ., எனப்படும், கூடுதல் தளபரப்பு சலுகை வழங்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. சென்னையில், புதிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போல, வாகனங்களின் எண்ணிக்கையும் வெகுவாக பெருகி வருகிறது. அதற்கேற்ற வகையில், சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக, அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை, 100 அடி சாலை என, பல சாலைகளில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இந்த சாலைகளில், புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் போது, நெடுஞ்சாலை துறை விரிவாக்கத்துக்காக, குறிப்பிட்டுள்ள அளவு நிலத்தை ஒப்படைக்கும்படி, உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். அவ்வாறு நிலம் வழங்கும் உரிமையாளர்களுக்கு, அந்த பரப்பளவின் அளவுக்கு, எப்.எஸ்.ஐ., குறியீடு வழங்கப்படும். இதில், நியூ ஆவடி சாலை உள்ளிட்ட பகுதிகளில், சாலையின் அகலத்தை சீராக்க, வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, துவக்கம் முதல், இறுதி வரை, ஒரே சீராக இருக்கும்படி சாலைகளை விரிவாக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சாலை விரிவாக்க திட்டங்களுக்கு, மனையின் முன்பகுதி காலி நிலங்களை வழங்குவோரை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன்படி, விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்தவர், மீதியுள்ள மனையில் மேற்கொள்ளும் கட்டுமான திட்டத்துக்கு, வழக்கத்தை விட, ஐந்து மடங்கு, எப்.எஸ்.ஐ., அனுமதிக்கலாம். அத்துடன், அவரது கட்டுமான திட்ட அனுமதியின் போது, மனை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். வாகன நிறுத்துமிடம், 'செட்பேக்' எனப்படும், பக்கவாட்டு காலியிடம் தொடர்பான விதிகளிலும் சலுகை வழங்கப்படும். அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், இத்திட்டம் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.