குழந்தைகள் துன்புறுத்தலுக்கு எதிராக போராட வேண்டும்
''குழந்தைகள் துன்புறுத்தலுக்கு எதிராக போராட வேண்டும்,'' என, நோபல் பரிசு பெற்ற, சமூக ஆர்வலர், கைலாஷ் சத்யார்த்தி பேசினார்.
குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்முறைகள், குழந்தை தொழிலாளர் உள்ளிட்ட துன்புறுத்தலுக்கு எதிராக, 'பாரத் யாத்ரா' என்ற பெயரில், கன்னியாகுமரி முதல், டில்லி வரை, நோபல் பரிசு பெற்ற, கைலாஷ் சத்யார்த்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார்.
இந்த யாத்திரை நேற்று, சென்னை வந்தடைந்தது. ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லுாரியில் நடந்த யாத்திரை நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி பேசியதாவது:
சட்டம், அனைவருக்கும் சமமான உரிமை மற்றும் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. ஆனால் குழந்தைகளுக்கு, அந்த உரிமைகள் கிடைப்பதில்லை. வறுமையின் காரணமாக, பல குழந்தைகள் விற்கப்பட்டும், குழந்தை தொழிலாளர்களாகவும், தங்களின் படிப்பு உள்ளிட்ட கனவுகளை இழக்கின்றனர்; மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகின்றனர். அவர்களுக்கான உரிமைகளை மீட்க, இந்த யாத்திரை உதவும். இவ்வாறு அவர் பேசினார்.
கைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது: நாட்டில் பெரும்பாலான குழந்தைகள் உரிமைகளை இழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும், பல குழந்தைகள் கடத்தப்படுகின்றன; பல குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றன. இதுவரை குழந்தைகளுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை. நான், முக்கியமான நபர் அல்ல. ஆனால், நான் சத்தமில்லாமல், குழந்தைகளின் உரிமைகளுக்காக போராடி வருகிறேன். நாடு, அரசியல்வாதிகளின் கையில் இல்லை; இளைஞர்களின் கையில் உள்ளது. 'பாதுகாப்பான குழந்தை; பாதுகாப்பான பாரதம்' என்ற முழக்கத்துடன், குழந்தைகள் துன்புறுத்தலுக்கு எதிராக நாம் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த யாத்திரை துவக்க விழாவில், நடிகர் தனுஷ் பங்கேற்றார்.
'அரசு உதவினால் சாதிப்போம்' : சென்னை, பாரிமுனையில் சாலையோரம் வசிக்கும் சிறுமி, சங்கீதா பேசியதாவது:சாலையோரம் வசிப்பதால் விபத்து, கடத்தல், பாலியல் துன்புறுத்தலுக்கு குழந்தைகள் ஆளாகின்றனர். அவர்களுக்கு வீடு வழங்கி, குழந்தைகள் படிப்பிற்கு, அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். நான், கால் பந்தாட்ட போட்டிக்காக வெளிநாடு செல்ல முயன்றபோது, வீடில்லாததால், பாஸ்போர்ட் கூட கிடைக்க வில்லை; தொண்டு நிறுவனமே உதவியது. அரசு, எங்களை போன்றோருக்கு உதவினால், சாதிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.