அனிதாவின் இறப்பை தடுத்திருக்கலாம்... சென்னை ஹைகோர்ட் நீதிபதி ஆதங்கம்!
நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசு நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றியிருந்தால் மாணவி அனிதாவின் இறப்பை தடுத்திருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்து ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். மாநில வழி பாடதிட்டத்தில் படித்து பிளஸ்2 தேர்வில் 1,148 மதிப்பெண் எடுத்துள்ள தான் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்று ஆவலுடன், நீட் தேர்வு எழுதியுள்ளேன். ஆனால், தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல், மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 23ல் விசாரணைக்கு வந்த போது நீதிபதி கிருபாகரன் நீட் விவகாரத்தில் மாநில பாடதிட்டத்தில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு துரோகம் விளைவித்துள்ளது என்று கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் உறுதியான முடிவை விரைந்து எடுக்காமல், தமிழக அரசு இழுத்தடித்ததாகவும் அவர் கூறிஇருந்தார்.
மேலும் மருத்துவ படிப்பில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் எத்தனை பேருக்கு நீட் தேர்வு அடிப்படையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஹைகோர்ட் ஆணையை செயல்படுத்தியிருந்தார் அனிதாவின் மரணத்தை தடுத்திருக்கலாம் என்று நீதிபதி கருத்து கூறியுள்ளார். மேலும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத மாணவர்கள், பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.