கல்வி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை தொடர தவிக்கும் மாணவி
குடும்ப வறுமை காரணமாக, கல்லுாரி கட்டணம் கட்ட வழியின்றி, விவசாய படிப்பை தொடர முடியாமல், சேலம் மாவட்ட மாணவி தவித்து வருகிறார்.
சேலம் மாவட்டம், தலைவாசல், ஆறகளூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 49; சலுான் வைத்துள்ளார். இவருக்கு, தவப்பிரியா, 19, என்பவர் உட்பட, மூன்று மகள்கள். 2014ல், ஆறகளூரில் உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்த தவப்பிரியா, 500க்கு, 480 மதிப்பெண் பெற்றார். இவரை, தலைவாசல், நத்தக்கரையில் உள்ள தனியார் பள்ளி, பிளஸ் 1 படிப்பில், கட்டணமின்றி சேர்த்து
கொண்டது.
தவப்பிரியா, 2016 பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,131 மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றார். விவசாயம் மீது கொண்ட ஆர்வத்தால், விவசாய படிப்பிற்கு விண்ணப்பித்தார். 200க்கு, 190.25, 'கட் - ஆப்' பெற்று, சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், அக்ரி பட்ட படிப்பை தேர்வு செய்தார்.
கல்லுாரி விடுதியில் தங்கி படித்த நிலையில், இரண்டாம் பருவ தேர்வின் போது, தந்தை ஆறுமுகம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.இதனால், இரண்டாம் ஆண்டு, கல்லுாரி கட்டணம் கட்ட இயலவில்லை.
கல்லுாரி, விடுதி உள்ளிட்ட கட்டணங்கள் சேர்த்து, இரண்டாம் ஆண்டுக்கு, 68 ஆயிரத்து, 250 ரூபாய் கட்ட வேண்டும். தந்தையின் உடல்நிலை, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களால், பணம் கட்ட முடியாததால், தவப்பிரியா படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தவப்பிரியாவின் தந்தை ஆறுமுகம் கூறியதாவது: நான்கு மாதங்களுக்கு முன், உயர் ரத்த அழுத்தத்தால், பக்கவாதம் ஏற்பட்டது. தற்போது, அதன் தாக்கத்தில் இருந்து, சிறிது சிறிதாக விடுபட்டு வருகிறேன். தவப்பிரியாவின் கல்லுாரி படிப்புக்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் தவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
உதவ விரும்புவோர், 94425 - 25326 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.