சி.பி.எஸ்.இ., புதிய தலைவராக குஜராத் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமனம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், புதிய தலை வராக, குஜராத்தில் பணியாற்றிய, பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பொறுப்பேற்றார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், சி.பி.எஸ்.இ., போன்றவற்றின் தலைமை நிர்வாக பொறுப்புகளுக்கு, அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே வர முடியும்.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ.,யின் தலைவராக இருந்த, ஆர்.கே.சதுர்வேதி, ஒரு வாரத்திற்கு முன், திடீரென மாற்றப்பட்டார். கடந்த, 2016 ஜூலையில் நியமிக்கப்பட்ட இவருக்கு, நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், தேசிய திறன் வளர்ப்பு முகமையின் பொது இயக்குனராக மாற்றப்பட்டார். சி.பி.எஸ்.இ.,யின் புதிய தலைவராக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கூடுதல் செயலராக பணியாற்றிய, அனிதா கர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். சண்டிகரைச் சேர்ந்த, அனிதா கர்வால், 1962 நவ., 26ல் பிறந்தவர். பி.எஸ்சி., விலங்கியல்; எம்.ஏ., அரசியல் அறிவியல்; எம்.பில்., ஆப்ரிக்க படிப்பு; எல்.எல்.பி., தொழிலாளர் சட்டம்; டிப்ளமா பிரெஞ்ச் மொழி படித்துள்ளார். குஜராத் பிரிவில், 1988ல், ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தார். 2014 பார்லி மென்ட் தேர்தலில், குஜராத் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார். குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமராக பொறுப்பேற்ற பின், குஜராத், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், மத்திய பணிக்கு மாற்றப்பட்டனர். குஜராத்திலிருந்து, இதுவரை, 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில், 14வது அதிகாரி, அனிதா கர்வால்.
'நீட்' பிரச்னை காரணம்? : சி.பி.எஸ்.இ., பொதுத் தேர்வில், 'மாடரேஷன்' என்ற, மதிப்பெண் சலுகை முறையை, வாபஸ் பெற்ற விவகாரத்தில், ஆர்.கே.சதுர்வேதி மீது, மத்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டது. சி.பி.எஸ்.இ., நடத்திய, 'நீட்' நுழைவுத் தேர்வில், 24 வினாத்தாள் வழங்கிய விவகாரம், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முதல் தேர்வு முடிவு வரையிலான விவகாரங்கள், கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான வழக்குகளை சமாளிக்க முடியாமல், மத்திய அரசு திணறியது. இந்த பிரச்னைகளே, சி.பி.எஸ்.இ., தலைவர் சதுர்வேதியின் மாற்றத்துக்கு முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.