தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம்: நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்குத் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி
இடைக்காலத் தடையை மீறி போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்குத் தொடர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை அனுமதி வழங்கியது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் (ஜாக்டோ- ஜியோ) அறிவித்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை தமிழ்ச்சங்கம் சாலையைச் சேர்ந்த டி.சேகரன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு, ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ஜாக்டோ- ஜியோ குழுவினரின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்திய நீதிபதிகள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், போராடுவது அடிப்படை உரிமையாகாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என்று கூறினர்.
மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்த வேறு வழிகளை கையாளலாம். அதை விடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தீர்வாக அமையாது என்றும் தெரிவித்தனர். அத்துடன், இதுதொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கோரிக்கை ஒன்றை திங்கள்கிழமை விடுத்தார். அதில், நீதிமன்ற உத்தரவை மீறி பல ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதையடுத்து மனுதாரர் தரப்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த குழுவினர் முடிவு செய்துள்ளனர். எனவே தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.