அறிவியல் விழா: 10ஆயிரம் மாணவர்கள் பங்கேற்பு
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், அக்., 13 முதல், மூன்று நாட்கள், சர்வதேச அறிவியல் விழா நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மாணவர்கள், 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மத்திய புவி அறிவியல் துறையின் கீழ் இயங்கும், தேசிய கடலியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனமும், தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து, மூன்றாவது சர்வதேச அறிவியல் விழாவை நடத்த உள்ளன. இந்த விழா, சென்னை, அண்ணா பல்கலை வளாகத்தில், அக்., 13-16 வரை நடக்கிறது.
இதில், எம்.பி.,க்கள் தத்தெடுத்த கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், 3,000 பேர் உட்பட, சர்வதேச அளவில், 10 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இதன் ஒரு கட்டமாக, 'சமுதாயத்திற்காக கடல்' என்ற தலைப்பில், அக்., 5ல், காந்தி மண்டபம் சாலையில் உள்ள, தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில், 7 - 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களும், 10 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களும், தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைக்கலாம். தேர்வு செய்யப்படும், முதல் மூன்று மாணவர்களுக்கு, ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சிக்கு, மாணவர்களை தயார்படுத்துமாறு, கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.