ஆசிரியர்கள் போராட்டத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் ஆதரவு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 7ம் தேதி முதல் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு இதுவரை அவர்களிடம் பேசி சுமூக முடிவு எடுக்காததால், இன்று முதல் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும் அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டமும், நாளை மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. அதைதொடர்ந்து, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு தமிழக மின்வாரிய ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, வாரியத்தின் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அதில், அரசை கண்டித்து 12ம் தேதி(நாளை) மாலை 5 மணிக்கு வாரியத்தின் தலைமை அலுவலகம் முன்பும் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி, நாளை மாலை மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம் செய்கின்றனர். இதில், தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.