உடல் குள்ளமாக இருந்தாலும் உழைப்பால் சிறக்கும் வாழ்க்கை!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள குள்ள மனிதர்கள், தங்களின் குறையை கண்டுகொள்ளாமல், உழைத்து சிறப்பான வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மிரட்டுநிலை, அரிமளம் பகுதிகளில், குள்ள மனிதர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.
3 அடி உயரம்:
இவர்கள், உருவத்தில் சிறியவர்களாக இருந்தாலும், மனம் தளராமல், சொந்தமாக தொழில் செய்தும், வேலைக்கு சென்றும், பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெரும்பாலும், 3 அடி உயரம் தான் உள்ளனர். ஒரு சிலருக்கு மட்டுமே திருமணம் நடந்துள்ளது. இவர்கள் குள்ளமாக இருப்பதால், பலரும் இவர்களை கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆனாலும், அதை பொருட்படுத்தாமல், பணிகளை தொய்வின்றி செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், ஒரு சிலருக்கு மட்டுமே, 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது:
குள்ளமாக பிறப்பதற்கு, ஹார்மோன் மாற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக, நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாற்றம், ரத்த சொந்தத்தில் தொடர்ந்து திருமணம் செய்வது, பரம்பரை, பரம்பரையாக குள்ளமாக பிறப்பது ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
நெருங்கிய ரத்த சொந்தத்தில், திருமணம் செய்பவர்களுக்கு பிறக்கும் குழந்தை, எலும்பு வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டு குள்ளமாக பிறக்கும் குழந்தைகளை உயரமாக்க, மருத்துவ ரீதியாக எதுவும் செய்ய முடியாது.இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
குள்ளமாக உள்ள ஜரினா பேகம், 40 என்பவரது தந்தை முகமது ஜபருல்லா கூறியதாவது:
எனக்கு ஜரினாபேகம் முதல் குழந்தை. அவர் பிறந்து, 40 ஆண்டுகள் ஆகி விட்டன. அப்போது, போதிய மருத்துவ வசதிஇல்லை. அவர் வயதுடையவர்களுடன் சேர்ந்து நிற்கும் போது, எனக்கு சில நேரத்தில் மனவருத்தம் ஏற்படும். நாளடைவில் அதுவும் கடந்து போய் விட்டது.
மிரட்டு நிலை பகுதியில், குள்ள மனிதர்கள் அதிகம் உள்ளனர். பலர் பிழைப்புக்காக, வெளியூர் சென்று விட்டனர். என் மகளுக்கு திருமணமாகவில்லை.
எனக்கு பின், அவர் எப்படி காலம் கடத்துவார் என்பது தான், கவலையாக இருக்கிறது. எனவே, இவர்களின் வாழ்க்கை சிறக்க, சிறுதொழில் துவங்க அரசு கடனுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.