மருத்துவ, அட்மிஷன் சென்னைக்கு, ஜாக்பாட்
'நீட்' தேர்வில், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மாணவர்கள் முன்னிலை பெற்று, அதிக மருத்துவ இடங்களை பிடித்துள்ளனர்.
தேர்வுக்கு விலக்கு கேட்டு, பல்வேறு கட்ட போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. இதில், பெரும்பாலும் ஊரக பகுதி மாணவர்கள், பின்தங்கிய நிலையில் உள்ளனர். மாநில அளவில், 'நீட்' தேர்வுப்படி நடத்தப்பட்ட, அரசு மருத்துவ கவுன்சிலிங்கில், சென்னை மாணவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.
கடந்தாண்டு, சென்னை மாணவர்கள், ௧௧௩ பேர் மட்டும், மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு, ௪௭௧ மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதே நேரம், 2016ல், பிளஸ் ௨ தேர்வு, இன்ஜி., மற்றும் மருத்துவ கவுன்சிலிங்கில், 'டாப்பர்' பட்டியலில் இடம் பெற்ற, நாமக்கல் மாவட்டத்தில், அதிகபட்சம், ௯௫௭ பேர் மருத்துவ இடங்களை பெற்றனர்.
இந்த ஆண்டு, 'நீட்' தேர்வின்படி நடந்த கவுன்சிலிங்கில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்த, ௧௦௯ பேர் மட்டுமே, மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர்.தங்கும் விடுதியுடன், பிளஸ் ௨ தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கும் பள்ளிகள் நிறைந்த, நாமக்கல் மாவட்டம், 'நீட்' தேர்வில் பின்தங்கி உள்ளது. இதன்படி, மனப்பாடக் கல்விக்கு, 'நீட்' தேர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.
வேலுார், கோவை, திருநெல்வேலி, கடலுார், திருவாரூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருப்பூர், தேனி, நாகை ஆகிய மாவட்டங்களில், 2016ஐ விட, இந்த ஆண்டு, மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இது குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது:'நீட்' தேர்வால், சென்னை போன்ற மாவட்டங்களில், மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில, வட மாவட்ட மாணவர்களுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. அனைத்து மாவட்டத்தினருக்கும் வாய்ப்பு ஏற்படும் வகையில், மாணவர்களுக்கு, 'நீட்' குறித்த பயிற்சிகளை அளிக்க வேண்டும்.வரும் கல்வியாண்டில், 'நீட்' தேர்வுப்படி தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்குமா என்பதை, தமிழக அரசு, உடனே தெளிவுபடுத்த வேண்டும்.
அதற்கேற்ப மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியும், முன் தயாரிப்பும் வழங்க வேண்டும். அதே போல், 'நீட்' தேர்வால், முன்னேறிய வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோருக்கு அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது. இந்த வேறுபாட்டையும் களைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.