ஆதார் - சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
வரும், 2018, பிப்ரவரிக்குள், 'சிம் கார்டு'டன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சிம் செயல் இழக்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில், 'லோக் நிதி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம், தாக்கல் செய்த, பொது நல மனுவில், 'சிம் கார்டுகளை, பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசார ணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது:பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், கிரிமினல்கள், போலி பெயர்களில், 'சிம் கார்டு' வாங்கி, தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க, சிம் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத சிம் கார்டுகளை, செயலிழக்கும்படி செய்யவும், அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள், சிம் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க, உத்தரவிட்டது.இது பற்றி, வாடிக்கையாளர்களுக்கு, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், விளம்பரம் செய்தும் தெரிவிக்கும்படி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.