மருத்துவ நுழைவு தேர்வுக்கு பயிற்சி அலகாபாத் டாக்டர்கள் அசத்தல்
உ.பி., மாநிலம், அலகா பாத்தைச் சேர்ந்த, பிரபல டாக்டர்கள் ஒன்றிணைந்து, '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, ஏழை மாணவர்களை தேர்ந்தெடுத்து, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.21 மாணவர்கள்உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அலகாபாத்தைச் சேர்ந்த, நரம்பியல் நிபுணர், டாக்டர் பிரகாஷ் கேதான் என்பவர், இரு ஆண்டுகளுக்கு முன், '21 டாக்டர்கள்' என்ற திட்டத்தை துவக்கினார்.அருகில் உள்ள, அரசு பள்ளிகள் மற்றும் குடிசை வாழ் மாணவர்களில், படிப்பில் சிறந்த, 9 - 12ம் வகுப்பு வரை படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்தார். அவர்களுக்காக, தன் வீட்டில், ஓர் அறையை வகுப்பறையாக மாற்றினார். ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களுடைய பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மற்றொரு பிரிவில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.தற்போது, டாக்டர் பிரகாஷுடன், அலகாபாத் நகரில், பிரபலமான டாக்டர்கள் இணைந்து, இந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.டாக்டர் பிரகாஷ் கேதான் கூறியதாவது:வறுமையால், தங்கள் கனவுகளை எட்ட முடியாத, நன்றாக படிக்கும், 21 மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், நாங்கள் ஏற்றுஉள்ளோம். அவர்களுக்கு, பள்ளி பாடங்களுடன், மருத்துவ நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சி அளிக்கிறோம். 4 மணி நேர பயிற்சிஇந்த வகுப்பில், கூலித்தொழிலாளிகள் மட்டுமல்லாமல், கூடை பின்னுபவர்களின் குழந்தைகளும் பயிற்சி பெறுகின்றனர். தினமும், நான்கு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.படிப்பதற்கு எந்த உதவியும் கிடைக்காத நிலையில், டாக்டர்களின் உதவியால், தங்களுடைய கல்வித் தரம் உயர்ந்து உள்ளதாகவும், எதிர்காலத்தில், சிறந்த டாக்டர்களாக உருவாக வாய்ப்பு கிடைத்து உள்ளதாகவும், பயிற்சி பெறும் மாணவர்கள் கூறினர்.