அரசு ஊழியர்கள் 74,675 பேருக்கு, நோட்டீஸ்
நீதிமன்ற உத்தரவை மீறி, நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் என, மொத்தம், 74 ஆயிரத்து, 675 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 7 முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்தது. செப்., 5ல், அந்த அமைப்பினருடன், முதல்வர் பேச்சு நடத்தினார். வேலைநிறுத்தம் அவர் அளித்த உறுதியை ஏற்று, சில சங்கங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தன; சில சங்கங்கள், 'வேலைநிறுத்தம் நடைபெறும்' என அறிவித்தன.
போராட்டத்தை கைவிடும்படி, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். அதையும் மீறி, நேற்று முன்தினம், வேலைநிறுத்தம் துவங்கியது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை, வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 'அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்' என, அரசு தலைமைச் செயலர் கிரிஜா, அறிக்கை வெளியிட்டார்.நீதிமன்ற உத்தரவை மீறி, சில சங்கங்கள் சார்பில், நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. அதில், 35 ஆயிரத்து, 850 ஆசிரியர்கள்; 38 ஆயிரத்து, 825 அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
நடவடிக்கை
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அவர்களிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.அதை மீறி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளம் வழங்கப்படாது. நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேலைக்கு வராதவர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முறையாக, மருத்துவ விடுப்பு கொடுத்தவர் மீது, நடவடிக்கை எடுக்கப்படாது. மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்படும்