அரசு அலுவலக கட்டடங்களில் சோலார் மின் நிலையம்
அரசு அலுவலக கட்டடங்களில், சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு, ஒன்பது மண்டலம் மற்றும், 42 மின் பகிர்மான வட்டங்கள் உள்ளன. மத்திய அரசு, சூரியசக்தி மின் உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து, மின் வாரியமும், மண்டலம் மற்றும் பகிர்மான வட்ட அலுவலகங்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது. ஆனால், போதிய நிதி இல்லாததால், அந்த பணிகளை துவக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் உள்ளது. தற்போது, மற்ற அலுவலக கட்டடங்களில், ஒவ்வொரு பகுதியாக, சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், 50 கிலோவாட்; வடக்கு காஞ்சிபுரம் கோட்ட அலுவலகத்தில், 10 கிலோவாட்; செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் மற்றும் மறைமலைநகர் கோட்ட அலுவலகங்களில், தலா, 5 கிலோவாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படும். அதேபோல், காஞ்சிபுரத்தில் புதிதாக அமைய உள்ள, இரு துணை மின் நிலைய கட்டடங்களில், மேற்கூரை சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இவை, மத்திய அரசின், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்ட நிதியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.