கழிவுகளில் இருந்து மின்சாரம் : திருப்பூருக்கு உதவும் பில்கேட்ஸ்
'செப்டிக் டேங்க்' மற்றும் பாதாள சாக்கடை கழிவுகளில் இருந்து மின்சாரம் யாரிப்பது குறித்து, பில்கேட்ஸ் நிறுவன அதிகாரிகள், திருப்பூர் மாநகராட்சியில் ஆலோசனை நடத்தினர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டில்லியில், 'பில்கேட்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்திவருகிறார். இந்நிறுவனம், மனித மற்றும் சாக்கடை கழிவுகளில் இருந்து, மின்சாரம் தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க, திருப்பூர் மாநகராட்சியுடன் கைகோர்த்துள்ளது. அந்நிறுவன அதிகாரிகள், நேற்று முன்தினம் திருப்பூர்வந்தனர்.
பில்கேட்ஸ் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் நியூட்டர் ஷராப்கான், மேலாளர் அருந்ததிதாஸ் உள்ளிட்டோரை, பெரியபாளையம் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அழைத்து சென்றனர். மாநகராட்சியில் சேகரமாகும் பாதாள சாக்கடை கழிவுகள்; அதில் சுத்திகரிக்கப்படும் அளவு; நகரின் மக்கள் தொகை; வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்து கேட்டறிந்தனர். பின், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், மீண்டும் ஆலோசனை நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறியதாவது: கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கு உதவ,அமெரிக்க நிறுவனம் முன்வந்துள்ளது. இத்திட்டத்துக்கு, தினமும், 20 முதல், 30 டன் கழிவுகள் தேவை என கூறியுள்ளனர். திருப்பூர் நகரில், அதைவிட அதிகமாகவே கழிவு சேகரமாகிறது. தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை வாயிலாக, நிர்வாக ரீதியான அனுமதி பெற்று, அடுத்தகட்ட பணி குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.